Wednesday, June 29, 2011

தொலைநோக்கி

தொலைநோக்கி ஒன்றினை தொட்டுப் பார்க்கிறேன்
தொலைதூரத்தை அதில் தொட்டுப் பார்க்க இயலுமோ?
தூரம் தொலைவானது தொலைந்த இடைவெளியால்தானே?
இல்லை, விட்டுப் போகாமல் இருக்கும் வாசனைகளாலோ?
சொல் சபேசா, அவை விட்டுப்போவது எந்நாள்?
நானும் தொட்டுப்பார்ப்பது எந்நாள்?
பட்டுப்போனவற்றிலும் பச்சையம் தடவிப்பார்த்தது நீயே.
பாரெங்கும் படரவிட்டுப் பார்ப்பதும் நீயே.
சட்டென்று கைவிட்டுப் பார்ப்பதும் ஏனோ?
எட்டுத்திசைகளிலும் சுற்றித்திரியும் என்மனதை
கட்டிப்போடக் கச்சையொன்று கிட்டாதோ?
கட்டிப்போடும் வித்தையதை அறிவேனோ?
சட்டிப்பானை அது கெட்டிப்பனையானாலும்
விட்டுப்போட்டுடைத்தால் மிஞ்சுமோ ஏதும்?
சட்டிப்பானைக்கு முன்னேயும் பின்னேயும்
ஏன் எப்போதும் எங்கெங்கும் இருக்கும் ஒன்றின் அறிவுதான்
கட்டிப்போடும் கச்சையோ, அல்லது வித்தையோ!
நீள் தூரத்தை குறுக்கிக் காட்டும் தொலைநோக்கியே
நீயே உன் நீளத்தைக் குறைத்துக் கொண்டு
நீ வந்தமர்வாய் எம் கண்களில்.

3 comments:

  1. தொலைநோக்குப் பார்வையோடு
    தொலை நோக்கிக் கவிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. //தூரம் தொலைவானது தொலைந்த இடைவெளியால்தானே?
    இல்லை, விட்டுப் போகாமல் இருக்கும் வாசனைகளாலோ?.. //

    //பட்டுப்போனவற்றிலும் பச்சையம் தடவிப்பார்த்தது நீயே.
    பாரெங்கும் படரவிட்டுப் பார்ப்பதும் நீயே.
    சட்டென்று கைவிட்டுப் பார்ப்பதும் ஏனோ?.. //

    -- நிறைந்த அர்த்தங்களைக் கொடுக்கும் நிறைவான வரிகள்.

    ReplyDelete
  3. கவிதை மிகவும் அருமை. மனசைக் கட்டிப் போடும் கச்சை கிடைத்தால் சொல்லுங்கள். எனக்கும் ஒன்று வேண்டும்!

    ReplyDelete