Saturday, October 09, 2010

ஆலவாய் வளர் அம்மையும் அப்பனும்

கபாலி நீள் கடிம் மதில் கூடல் ஆலவாயாம்
எத்தலத்தினும் ஏழுவரும் புகழ்
முத்தும் முத்தமிழும் முற்றும்
மாநகர் மதுரையம்பதி தன்னில்
அம்மையும் அப்பனும் அமரந்தருள் தரும்
அழகினை என்னென்று சொல்வேன்!


பாபநாசம் சிவன் அவர்களின் இரண்டு அழகான பாடல்கள் துணையுடன்!
முதலில் தேவி நீயே துணை என்று, அங்கயற்கண்ணியாம் அம்மை உமையன்னையைப் பாடும் பாடல். இவள் புவன சுந்தரி, புவனேஸ்வரி। மலையத்வஜன் மாதவத்தின் பலனாய் பிறந்தவள்। காஞ்சனமாலை புதல்வி. அமுதாய் இனிக்கும் செந்தமிழ் வளர்த்த தேவி நீயே துணை!


பாடல் : தேவி நீயே துணை
இராகம்: கீரவாணி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலுக்கான சுரக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி
(தேவி...)

தொடுப்பு
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா
(தேவி...)

முடிப்பு
மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த
(தேவி...)

மார்கழி மகாஉற்சவத்தில் உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிட பாடலை இங்கு கேட்கலாம்.

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்.

இப்பாடலினை நாட்டியத்துடன் இங்கு பார்க்கலாம்.

--------------------------------------------------------------------------------------------------------
எண்டிசைக் கெழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே.
- திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறை

திருஆலவாய் மேவிய பெம்மான் சந்திரசேகரன், சுந்தரேஸ்வரன் - சங்கத் தமிழ்த் தலைவன், மீனாட்சி மநாளன், அடிமையான என்ன ஆண்டருள் செய்வான்!

என்று தவழ்ந்தோடி வரும் கௌரி மனோகரி ராகத்தில் கௌரி மனோகரனைப் பாடும் பாடல்:

பாடல் : கௌரி மனோகரா
இராகம்: கௌரி மனோகரி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கௌரி மனோகரா,
கருணாகர சிவ சங்கர ஸ்ரீ
கௌரி மனோகரா!

தொடுப்பு
சௌரிராஜன் பணியும்
சதாசிவ சந்திரசேகரா,
சுந்தரேஸ்வரா!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

முடிப்பு
தாராதரம் புகழ் ஆலவாய் வளர்
சங்கத் தமிழ்த் தலைவனே
வராபயகர மீனலோசனி மநாளன்
உளமிரங்கி அடிமையை ஆள்!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

இப்பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


அனைவருக்கு இனிய நவராத்ரி வாழ்த்துக்கள்!

4 comments:

  1. கெளரி மனோகரா பாடல் கேட்க கேட்க தேனாக இனிக்கிறது.

    நவராத்ரி வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  2. வாங்க சுப்புரத்தினம் ஐயா!
    கௌரி மனோகரியும் கௌரி மனோகரனும் சேரும்போது தேனும் சேர்ந்தது போலும்!

    ReplyDelete
  3. மதுரையை நினைத்து மீனாட்சியையும் பார்த்தது இந்தக் காலை வேளையை புண்ணியப் படுத்தியது. தேவி நீயே துணை பாடல் நவராத்திரியில் எல்லார் வீட்டிலும் பாடச் சொல்லுவார்கள். இதுவும் எம்.எஸ் அம்மாவின் அம்பா நீ இரங்காயெனில் புகலேதும்,அருள் புரிவாய் கருணைக்கடலே...எல்லாம் மறக்க முடியாது. மிகவும் நன்றி,

    ReplyDelete
  4. வாங்க வல்லியம்மா, நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete