Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்:

19 comments:

  1. //சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
    தனிமருந்துடையாய்
    பிணியெலாம் களைவாய்//

    சூப்பர்!
    மருந்தீஸ்வரர் என்றால் மருத்துவனாகிய ஈசன் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்!

    உண்மையில் மருத்துவர் = அம்பிகையே! :)
    அவன் மருந்து மட்டுமே! அதான் மருந்து+ஈஸ்வரன்! :))

    அந்த மருந்தைத் தரும் மருத்துவ மங்கை திரிபுரசுந்தரி = முப்புரத்தெழிலி திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  2. நல்ல பாடலொன்றின் அறிமுகத்திற்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  3. வாங்க கே.ஆர்.எஸ்!

    சூப்பரோ சூப்பர்!
    மருத்துவ மங்கைக்கு நவராத்ரி சிறப்பு சரணம்!

    ReplyDelete
  4. வாங்க குமரன்!
    வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  5. பிற்சேர்க்கை:
    ஒருமுறை முத்துத்தாண்டவர் கோயிலுக்குச் செல்லுகையில் அவரை பாம்பொன்று தீண்டிவிட,
    அவர் இவ்வாறு பாடுகிறார்:
    "அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே..."
    உடனே, விடம் இருந்தவிடம் தெரியாமல் மறைந்து விட்டதாம்!

    ReplyDelete
  6. சதாசிவமே பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும், மருந்தை வாஞ்சையுடன் கொடுக்கும் (அம்பிகையாம்) மருத்துவராகவும் (குருவாகவும்) வருகிறதல்லவோ?

    மலைமருன் திடநீ மலைத்திட வோவருண்
    மலைமருந் தாயொளி ரருணாசலா

    என்று பகவான் ஸ்ரீ ரமண மகர்ஷி அருணாசல அக்ஷர மணமாலையில் பாடுகிறாரே.

    நல்ல பதிவு. சிறப்பான தூரன் பாட்டு. ஆனால் முழுவதும் இல்லையே.

    திருவான்மியூரின் நினைவுகளைக் புதுப்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி ஜீவா அவர்களே.

    (இயன்றவரை தமிழ் தளத்தில் ஆசிரியராக இருந்த ஜீவா தானே நீங்கள் ?)

    ReplyDelete
  7. வாங்க ராம்ஜி,
    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க 'அவனடிமை' அவர்களே!
    >>மருத்துவராகவும் (குருவாகவும்) <<
    ஆகா!, அன்னேயே குருவாக அமைவது எத்துணை சிறப்பு!
    >>ஆனால் முழுவதும் இல்லையே<<
    முழு பாடலையும் கேட்க 'Play full song here' என்கிற சுட்டியை அழுத்தவும்.
    அல்லது இந்த சுட்டியிலும் கேட்கலாம்.

    //இயன்றவரை தமிழ் தளத்தில் ஆசிரியராக இருந்த ஜீவா தானே நீங்கள்//
    அவரில்லை ஐயா, அவர் வெண்பா வாத்தி.

    வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  9. அருமை ஜீவா. மருத்துவ மாமணியின் திருவடிகள் சரணம் :)

    ReplyDelete
  10. வாங்க கவிநயாக்கா!

    ReplyDelete
  11. மிக அருமை ஜீவா. நானே ஒருமுறை மருந்தீசர் பற்றி பதிவிடவேண்டும் என்று நினைத்தேன்...அழகாகப் பாடலுடன் செய்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. நல்லது மௌலி சார், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. தூரன் அவர்களின் ஒரு நல்ல பாடலுக்கும் திரிபுரசுந்தரியின் அருளாசிகளுக்கும் மிக்க நன்றி. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ஆரவாரமற்று அமைதியாக இருந்த காலத்தை அறிவேன்.இப்போது கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது :)))

    ReplyDelete
  14. வாங்க கபீரன்பன் ஐயா,
    வருகைக்கு நன்றிகள்.

    >>கோவில் ஆரவாரமற்று அமைதியாக இருந்த காலத்தை அறிவேன்<<
    12 வருடங்களுக்கு முன்னால் முதல்முறை அங்கு சென்றிருந்தபோது அப்படித்தான் இருந்தது!
    அப்போது உச்சிகால வேளையாதலால், அப்படி இருந்ததோ என நினைத்துக் கொண்டேன்...

    >> இப்போது கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது :)))<<
    நிச்சயமாக இல்லை. தங்க ரதத்திற்கு அருகே கூட்டம் அலைமோதியது - அதுவும் இரவு மணி 8:30க்கு!

    ReplyDelete
  15. நல்ல மருந்திம்மருந்து சுகம் நல்கும் வைத்திய நாதன் தேவி திரிபுர சுந்தரி,

    நன்றி ஜீவா ஐயா.

    ReplyDelete
  16. //கோவில் ஆரவாரமற்று அமைதியாக இருந்த காலத்தை அறிவேன்//

    அடியேன் கிண்டியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு தடவை NSS மூலமாக சென்று உழவாரப்பணி ( திருக்கோயில் சுத்தம் செய்த நினைவு வருகின்றது, அப்போது கோவிலுக்கு யாரும் அதிகம் வரமாட்டார்கள், இப்போது நிலைமை மாறி ்விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  17. வாங்க கைலாசி ஐயா,
    வருகைக்கு மிக்க நன்றி.

    >>மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<<
    மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  18. அருமை அருமை, அன்னையின் திருவருள் கிடைக்கட்டும் ஐயா.

    ReplyDelete