Thursday, December 11, 2008

தமிழ்க்கவி யோகியர் மூவர்

தமிழிசை மூவரைப் பற்றிப் பார்த்தோம். தன்னிகரிலா தமிழ்க் கவிஞர்களுள், தவித்திரு யோகியர் மூவரை இவ்விடுகையில் பார்ப்போம். இந்த மூவரும் கிட்டத்தட்ட, ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர். நேரடியாக இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும், அவருக்கு முன்னால் வந்தவர்களால், ஈர்க்கப்பட்டவர்கள்!
யாரோ, அவர் யாரோ? என்ன பேரோ?

* தாயுமானவர் (1706 - 1744)
* இராமலிங்க வள்ளலார் (1823 - 1874)
* மகாகவி பாரதியார் (1882 - 1921)

இம்மூவரைப் பற்றித்தான் சொல்ல விழைகிறேன்!. திருமூலர், அருணகிரியார், பட்டினத்தார், எனப்பல யோகியரும் சீரார்ந்த இந்நாட்டில், இம்மூவரையும், குறிப்பாகச் சொல்வதற்குக் காரணம், அவர்களது கருத்தில் ஒற்றுமைகளும், ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டதுமே!. விரிவாகப் பார்க்கலாமா?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரியும். அரசாங்க பதவியில் இருந்தவாறே, யோக வழியில் நடந்தவர். அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரை அரசைத் துறந்து, இராமநாதபுரம் அரசுக்குச் சென்றவர். அங்கும், நாளும் நெடிதாய் தவத்தில் திகழ்ந்தவர். வஞ்சகர்களின் சூழ்ச்சியால், அவர் ஒரு சமயம் தவத்தில் இருக்கையில், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டு, அவரது உடலுக்கு தீமூட்டி விடப்பட, தீப்பிடித்து எரியும் உடலோடு, தவம் கலைந்து எழுந்திட, பின்னர், இனியும் இவ்வுடலால் பயனில்லை, இந்நிலையிலேயே, இப்பிறவி முடியட்டும் என்றெண்ணி, முக்தி அடைந்தவர். அரசாங்க அலுவல்களிலும், தவத்தில் ஆழ்ந்த நேரங்களிலும் போக, இதர நேரங்களில், இவர் இனிக்க இனிக்க எழுதி வைத்த அருந்தமிழ் கவிதைகள், வையத்தில் மாந்தரை நன்னெறிக்கு உய்விப்பன. வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் சமரசம் செய்வதை இவரிடம் பார்க்கலாம்.

அருட்பெரும்ஜோதி வள்ளலார், சுத்த சன்மார்கம் மொழிந்தவர். வேதாந்தம், சித்தாந்தம் மட்டுமல்லாமல், ஆறு அந்தங்களுக்கும் சமரசம் செய்தவர். வள்ளலாரின், திருவருட்பா பாடல்களைப் பார்த்தால், தாயுமானவர் விட்ட இடத்திலிருந்து, வள்ளலார் தொடர்ந்து போல இருக்கும். ஒருமுறை அன்பர் ஒருவர், வள்ளலாரிடம், தாங்கள், முற்பிறவியில் தாயுமானவரோ என வினவ, அதற்கு சுவாமிகள் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். அந்த அன்பர், தொடர்ந்து, தனது வினாவை வலியுறுத்த, வள்ளலார், 'உம், இருக்கலாம்' என்றாராம்!. இந்த சம்பவம் சுவையானதாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், வள்ளலாரும், தாயுமானவரைப் போல, சமய சமரசத்தினை வலியுறித்தியவர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என முன்மொழிந்தவர். வள்ளலாரே, வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினில் தானும் ஒருவன் என்கிறார்.

தாயுமானவர் பாடல்களில் 'ஆகாரபுவனம் - சிதம்பர இரகசியம்' என்றொரு பகுதி உண்டு. அப்பகுதியில் இருந்து:
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப்பொருளும் தான் ஒன்று ஆகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;
பகர்வு அரிய தில்லைமன்றுள் பார்த்தபோது அங்கு
என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன
எச்சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர்
கல்மார்க்க நெஞ்சம் உள எனக்கும் தானே
கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும்.
ஆகாயத் தலமாம் தில்லைச் சிதம்பரத்தில் நடராசன் ஆடும் ஆனந்த நடத்திற்கு 'பொது நடம்' என்றொரு பெயர். அப்பெயர் போலவே, அவன் அரூபமாக சிதம்பர இரகசியத்தை உரைப்பது, அவன் எல்லா சமயங்களுக்கும் பொதுவானவன் - எனச் சன்மார்கம் சொல்லுகிறார். எல்லா சமயங்கள் உரைப்பதும், திருச்சிற்றம்பலத்திலேயே அடங்கி உள்ளது என்கிறார்.

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கி தரிசித்தபோது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய் உறவாம் பொருளே
காய்வகை இல்லா உளத்தே கவிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்பிரியும்
சோதிநடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே.(திருவருட்பா - 4133)
என்பார் வள்ளலார். எங்கும் நிறைப் பரவெளியில், ஆகாயத் தலமதில், பொன்னம்பலவன் நிறைந்திருந்தான் என, தான் சிறு வயதிலேயே கண்ட ஆனந்த களிப்பினை, சோதி வடிவானைப் பற்றி அருட்பெரும்சோதியார் போற்றுதல், என்னப் பொருத்தம்!

தாயுமானவர், மற்றும் வள்ளலாரின் தாக்கத்தினை மகாகவி பாரதியிடம் நிறையவே காணலாம். சுதேசமித்திரனில், பாரதி வள்ளலாரைப் போற்றி, 'தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு' ஆதிகர்த்தாவாக வள்ளலார் விளங்குகிறார் என்கிறார். மேலும், 'ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன' என்கிறார். 'எம்மதமும் சம்மதம்' எனும் வள்ளலாரின் சமய சமரச கொள்கையினை மகிழ்வுடன் பாரதியும் ஏற்றார். பாரதி, திருவருட்பாக்களையும் நன்கு அறிந்திருந்தார். 'நான் படும் பாடு சிவனே உலகோர் நவிலும் பஞ்சு...' எனத் தொடங்கும் திருவருட்பாவை அடிக்கடி பாடிக்கொண்டிருப்பாராம். 'களக்கமற பொதுநடம்...' எனத்துவங்கும் திருவருட்பாவினை சற்றே மாற்றி அமைத்து, அதில் கர்சன் பிரபுவினை, 'கர்சன் என்ற குரங்கு' என வருமாறு மாற்றி அமைத்திருந்தார்.

'எல்லா உயிரும் இன்புற்று வாழ்க' எனச்சொன்ன வள்ளலார் போலவே, பாரதியும் ஆகாயத்தின் மீதேறி, 'புவியில் துன்பமும், வருமையும் நீங்கி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்' என வேண்டுவார் - 'பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்', எனும் கவியில் பாரதி. 'பாருக்குள்ளே தெய்வம் ஒன்று' என பாரதியும் சமய சமரசம் பாடிடக் காணலாம். 'இகத்தில் பரம்' என்பார் வள்ளலார். 'செத்த பிறகு என்ன சிவலோகம், வைகுந்தம்? இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி சுத்த அறிவு நிலையில் களிப்போம்.' என்று சங்கினை முழங்குவார் பாரதி.

வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தின் முடிபு, 'மரணமில்லாப் பெருவாழ்வு'. பாரதியும், இக்கருத்தை, 'பாரதி - அறுபத்தாறு' பகுதியில் உரைப்பதைக் காணலாம். இப்பகுதியினை எழுதுவதற்கு முன்பு, நாற்பது நாள் மௌன விரதத்தினைக் கடைப் பிடித்தாராம், பாரதி. ஓயாது, ஏதாவது, பேசிக் கொண்டும் , பாடிக் கொண்டும் இருக்கும் பாரதி மௌன விரதம் இருந்தாரென்றால், அது அவருக்கு புதுச்சேரியில் ஏற்பட்ட யோகியர் தொடர்பாலாகும். தாயுமானவரின் குருவின் பெயர் 'மௌனகுரு தேசிகர்'. அவர், திருமூலர் வழியில் வந்தவர். இவர்கள் தாக்கம் பாரதிக்கு, புதுவையில் இருக்கும் காலத்தில் வளர்ந்திருந்தது. மேலும், பாரதி, தனது பகவத் கீதை உரையினில், தாயுமானவரை மேற்கோள் காட்டுகிறார். தனது 'ஆனந்தக் களிப்புச் சந்தத்திற்கு' 'தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்' என்றே பெயர் இடுகிறார் பாரதி. தேமாச் சீரில் முடியும் 'வந்த மாதரம் என்போம்', 'தாயின் மணிக்கொடி பாரீர்' போன்றவை இச்சந்தத்தில் வரும்.

இப்படியாக, பாரதிக்கும், தனக்கு முன் வந்த சித்தர்களின் மேலான ஈர்ப்புகள் தெளிவாகின்றன. பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமான காலத்தில், மருத்துவர்களையும், அவர்கள் தந்த மருந்துகளையும் துறந்து, கிட்டத்தட்ட, தன் பூவுடலைத் துறக்கும் முடிவினை பாரதி எடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதில் தாயுமானவரின் முடிவினையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. தாயுமானவரும், பாரதியும், ஒன்றுபோல கிட்டத்தட்ட 38 வயது வரைதான் வாழ்ந்திருக்கிறார்கள்.! 'முக்தி என்றொரு நிலை சமைத்தாய்' எனப் பரமனைப் பாடிய பாரதிக்கு, அந்நிலையைத் தழுவிடும் நேரமும் வந்திட, அதை இனிதே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

உசாத்துணை: ஊரன் அடிகள்

12 comments:

  1. அருமையான ஒப்பிடுதலுடன் கூடியதொரு பதிவுக்கு நன்றியும், வாழ்த்துகளும்

    ReplyDelete
  2. வாங்க கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. வாங்க கே.ஆர்.எஸ்!

    ReplyDelete
  4. 'வானைப் போல வளைந்து கொண்டானந்தத்
    தேனைத் தந்தெனைச் சேர்த்து கலந்துமெய்ஞ்
    ஞானத் தெய்வத்தை நாடுவேன் நானெனும்
    ஈனப் பாழ்கெட என்று மிருப்பேனே .. தாயுமானவர்
    என்று மிருக்க வுளங்கொண்டாய்.
    இன்பத் தமிழுக் கிலக்கியமாய்
    இன்றுமிருத்தல் செய்கின்றாய்.
    இறவாய் தமிழோ டிருப்பாய் நீ
    ஒன்று பொருள;தின்பமென‌
    உணர்ந்தாய் தாயு மானவனே !
    நின்ற பரத்து மாத்திரமோ ?
    நில்லா இகத்தும் நிற்பாய் நீ ...

    எனத் தாயுமானவர் வாழ்த்து பாரதியார் பாடியது
    " இறவாமை " எனும் தலைப்பிலே உள்ளது.


    சுப்பு ரத்தினம்

    ReplyDelete
  5. ஆகா, அருமையான பாடலை மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள் சூரி ஐயா.

    பரத்து மாத்திரமோ?, நில்லா இகத்திலும் நிற்பாய் நீ - என இகத்தில் பரத்தினை வலியுறுத்துகிறான்,
    வாழ்க நீ எம்மான், எம்மனத்தில்.

    நில்லா இகம்!
    நில்லாமல் சுழலும் இப்பிறப்பை,
    தந்திங்கு, ஏங்க விட்டு,
    தள்ளி அகல நின்று வேடிக்கை பார்க்கும் பரமா,
    யானுனை அறியாமற் தடுக்கும் அறியாமை
    அகல

    இப்பிறப்பிலேயே, இவ்வுலகத்திலேயே,
    இந்த யாக்கையிலேயே பேரின்பம் பெற

    நிலை நிற்பாய், நிறுத்துவாய் சுழலை!

    ReplyDelete
  6. //பாரதி வள்ளலாரைப் போற்றி, 'விவேகானந்தருக்குப் பிறகு தமிழகத்தில் ஆன்ம எழுச்சியினைத் தோற்றுவித்த பெருமை வள்ளலாரைச் சாரும்' என்றெழுதினார் //

    காலத்தால் வள்ளலார் முற்பட்டவர் ஆயிற்றே. வள்ளலாரின் பெருமை மிகவும் நிதானமாகத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்ததோ ?

    //அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரையைத் துறந்து, இராமநாதபுரம் சென்றவர் //

    அரசியால் துன்பம் வந்தது உண்மை. ஆனால் அது திருச்சியை சேர்ந்த விஜய ரகுநாத சொக்கன் என்னும் மன்னனுக்கு முக்கிய மந்திரியாக இருந்து பெருமை பெற்றவர். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியிடம் அபார பக்தியுடையவர் என்றும் படித்திருக்கிறேன். மதுரை அவருடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக அறிந்திருக்கவில்லை.

    ஒப்புமையில் விருப்பம் உள்ள வாசகர்களின் வசதிக்காக இரு கட்டுரைகள் கீழே :

    பாரதி மற்றும் தாயுமானவர் பற்றிய கட்டுரை ஃசிபி யில் காணலாம்

    பாரதியும் வள்ளலாரும்

    ReplyDelete
  7. வாருங்கள் கபீரன்பன் ஐயா,
    //காலத்தால் வள்ளலார் முற்பட்டவர் ஆயிற்றே. வள்ளலாரின் பெருமை மிகவும் நிதானமாகத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்ததோ ?//
    விவேகானந்தரைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டவர்தான் வள்ளலார்.
    //'விவேகானந்தருக்குப் பிறகு தமிழகத்தில் ஆன்ம எழுச்சியினைத் தோற்றுவித்த பெருமை வள்ளலாரைச் சாரும்'// என்று பாரதி நேரடியாகச் சொல்லவில்லை. என்புரிதல் ஏற்பட்ட குழப்பம் தான் அது! 'விழிப்பு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இருந்து பாரதியின் வரிகள் இங்கே:
    "ராமலிங்க ஸ்வாமிகளும், 'சுதேசமித்திரன்' சுப்ரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதாலவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன".

    வள்ளலாரை விழ்ப்புக்கான, ஆதி கர்த்தா எனவே சொல்லுகிறார். கட்டுரையில் மாற்றம் செய்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  8. கபீரன்பன் ஐயா,
    பாரதியும் வள்ளலாரும் என்ற கட்டுரையின் சொல்லுப்பட்ட சில கருத்துக்கள் நன்றாக இருந்தன - சுட்டிக்கு நன்றி.
    அக் கட்டுரையில் இருந்து:
    //ஆனால் இந்த எளிமையைப் பாரதி எங்கிருந்து பெற்றான் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் கவனிக்கத் தவறிவிட்டது.//
    - இவை வள்ளலாரிலுருந்து பாரதிக்கு கிடைத்தவை என்கிறார் ப.சரவணன்.
    நான் தாயுமானவரையும் அப்படியலில் சேர்க்க விழைகிறேன்.

    ReplyDelete
  9. //அரசியால் துன்பம் வந்தது உண்மை. ஆனால் அது திருச்சியை சேர்ந்த விஜய ரகுநாத சொக்கன் என்னும் மன்னனுக்கு முக்கிய மந்திரியாக இருந்து பெருமை பெற்றவர்//
    நீங்கள் சொன்னது, இங்கும் சரிதான் ஐயா.
    மதுரை எனக்குறிப்பிட்டது, மதுரை நாயக்கமார் அரசினை. இந்த அரசிக்கும் பெயர் - மீனாட்சியாம்.
    மற்றபடி, விஜய ரகுநாத சொக்கநாதர், திருச்சியைத் தலைநகராகக் கொண்டு மதுரை அரசை ஆண்டார் என்பதும், தாயுமானவரும் திருச்சியில் இருந்தார் என்பதும் சரியே.

    ReplyDelete
  10. Anonymous5:16 AM

    //தாய்முதலோ ரோடுசிறிய பருவமதில் தில்லைத்...//

    `தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்...' என்றிருத்தல்வேண்டும்.

    - அ. நம்பி

    ReplyDelete
  11. குறிப்புக்கு நன்றி அ.நம்பி, இப்போது மாற்றி விட்டேன்!

    ReplyDelete