Wednesday, August 13, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினொன்று

இரமண மகரிஷி வெண்பாக்களாய் வடித்து வைத்த ஆத்மபோதம்:
முன்னுரை இங்கே.
இதுவரை நாம் பார்த்த பகுதிகள் இங்கே.

நெடுநாள் கழித்து, ஆத்மபோதம் படிப்பதை தொடரலாமா?

பா 45:
பிரம்மத்திற் சீவன் பிராந்தியாற் கட்டை
புருடன்போற் கற்பிதன் பொய்யாம் - உருவத்தின்
தத்துவம் யாதென்று தானுணரின் அவ்வுருவம்
வத்துவா காது மதி.
(வத்து - வஸ்து)

இந்த ஜீவனை எல்லா செயல்களுக்கும் மூலமான பிரம்மம் என இறுமாப்பு கொண்டு, 'நான்', 'எனது', என்ற பொய்யான மயக்கத்தில் ஜீவனை பிரம்மமாகக் கொள்வது, வைகறையில் தொலைவில் தெரியும் கட்டை மரத்தைப் பார்த்து அங்கு யாரோ ஒரு மனிதன்தான் இருக்கிறான் என்பதான பொய்யான தோற்ற மயக்கத்தில் ஏமாறுவது போன்றதாகும். இந்த ஜீவன் இருக்கும் வரை அது பிரம்மமாகாது. பிரம்மமானது, வெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வையாளன். பார்வையாளனும், பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாக இருந்தால்தானே அதனால் கவனிக்க இயலும்?. ஆன்மாவானது, உருவத்தின் உண்மையான முழுமையான தத்துவம் யாதென்று உணர்ந்தால், அது யாதொரு உருவமும் கொண்டிருக்காது என அறிவாய்.
ஜீவனின் இயற்கையானது, அறியாமல் இருக்கும் ஆன்மாவாகும். அந்த ஆன்மா, 'தத்வமஸி (அதுவே நான்)' போன்ற மகாவாக்கியங்களை ஓதுவதன் மூலமாக பிரம்மத்தினை அறிந்துணர, அதன் அறியாமையும், அது கொண்டிருக்கும் ஜீவன் என்னும் உருவமும் அழிந்திடும்.

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை 31.7 (திருக்கடவூர் வீரட்டம்)
மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.

காயத்தைக் கழிக்காமல் மாயத்தை, பொய்ப்பொருள் தரும் மையலை, வெல்ல இயலாமல், மெய்ப்பொருளை நேயத்தோடு தேடி அறிய இயலாமல் இருக்கின்றேனே!

அடுத்த வெண்பாவில், அந்த பிரம்ம ஞானம் என்ன செய்ய வல்லது என்பதைச் சொல்லுகிறார்:

பா 46:
தத்வசொரூப அனுபூதி ஆற்றான் உதி
உத்தம க்யானம் உடனேயாம் மித்தைய்யா
நானெனதெனக் க்யான நசிப்புக்குன் திக்பிரமை
பானு உதயத்தெனவே பார்.

ஆற்றான் - வலிமையில்லாதவன்
பானு - சூரியன்

இந்த செயல் உடனுக்குடன் நிகழ்வது.
ஆன்ம வலிமையில்லாதவனுக்கு தன்னறிவை, அனுபூதியை, எட்டிடும் போது,
தான் யார்? என்கிற பேரறிவை அடைந்த உடனேயே, 'நான்', 'எனது' என்கிற எண்ணங்களெல்லாம் நசிந்து நொடிந்து போகும். எப்படி சூரியன் உதித்தவுடன், எந்த திசை எந்தப்பக்கம் என்னும் குழப்பம் விலகிடுமோ அதைப்போல.

நான், எனது எனும் எண்ணங்கள் ஜீவனில் தோன்றுவது இயற்கையானது. அதுபோல, திசைக் குழப்பமோ, மரத்தை மனிதனாகக் கொள்வதோ, கயிறை அரவமாகக் கொள்வதோ - இவையெல்லாமே, ஜீவனில் தோன்றும் இயற்கையான குழப்பங்கள். இவையெல்லாம், ஆதவன் எழுந்தவுடம் விலகிடும் இருள் போல, சச்சிதானந்த பேரறிவு ஜீவனில் விளைந்திட்ட உடனேயே விலகிடுமாம்.

4 comments:

  1. //பிரம்மமானது, வெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வையாளன்.//

    கொஞ்சம் உதைக்குதே! வார்த்தைகள் சரியா அமையலையோ?

    ReplyDelete
  2. வாங்க திவா சார்!
    விளக்கமாய் சொல்லப் பார்க்கிறேன்:
    ஜீவன் இங்கே இருக்கு - ஜீவன் இன்னும் பிரம்மம் என்னும் பரமனின் நிலையை அறியாமல் இருக்கிறது. (அந்த பரமனின் ஒருதுளிதான் ஜீவன் என்றாலும்).

    ஜீவனின் பார்வையில், புத்தியின் பார்வையில் பரமன் அன்னியன். தன் செயல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும், அந்த அன்னிய பரம புருஷன் ஜீவனைப் பார்க்கும் பார்வையாளன். ஜீவன் பரமனை தன் புத்தியில் பிம்பமாகப் பார்ப்பதால், தானே எல்லாம், எனதே என் செயல் - என அகங்காரம் தோன்ற வழி வகுக்கிறது. தான் இந்த புத்தியல்ல, தான் இந்த ஜீவனல்ல (நேதி நேதி) எனச்சொல்லி, தான் யார், தான் யார்?, தான் அந்த அன்னிய பரமன், அந்த அன்னிய ஆத்மாவே என் ஆன்மா என தெளிய வேண்டும்.

    ஜீவன் பரமனை அறிய என்ன செய்ய வேண்டும்? தன்னைப் பார்ப்பது யார் என திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படி திரும்பிப் பார்க்கப் பார்க்க, பார்வையாளனும், பார்க்கப்படும் பொருளும் வேறல்ல என்கிற தெளிவால் ஏற்படுகிற நிலையே அனுபூதி.

    இரண்டில் இருந்து தொடங்கி, இரண்டல்ல என்பது முடிபு பெறுகிறது.

    தன்னைத்தான் ஜீவனைத் தாம்பிலே பாம்புபோல்
    எண்ணியே அச்சமுறுகின்றான் - தன்னைத்தான்
    ஜீவனால் அன்யபரமன் ஆன்மாவென்று
    தெரிந்ததனால் அவன் ஞானியாவான். (27)

    ReplyDelete
  3. //சூரியன் உதித்தவுடன், எந்த திசை எந்தப்பக்கம் என்னும் குழப்பம் விலகிடுமோ
    அதைப்போல.//

    இதைவிட அற்புதமான த்ருஷ்டாந்தத்தைச் சொல்லிட இயலாது.
    சூரியன் உதிக்குமுன்னேயும் சூரியன் இருக்கிறான்.
    திசைகளும் இருக்கின்றன.
    நாமும் இருக்கின்றோம்.
    சூரியன் உதித்தவுடன் நமக்கு தெளிவு ஏற்படுகிறது.
    திசைகள் எங்கே எது என்று புலப்படுகிறது.

    அதுபோலவே ஜீவாத்மாவுக்குள்ளும்
    அனந்தமான பிரும்மன் உள்ளான்.
    பிரும்ம ஞானம் ஏற்படுவதற்கு முன்னேயும்
    ஜீவாத்மாவும் பிரும்மனும் ஒன்றே.
    ஆயினும் அந்த ஞானம் ஒரு ஆசார்யன் வழியே வரும்போது
    சரீரம், புத்தி, மனஸ் எல்லாம் மாயை என உணர்வு ஏற்பட்டு
    இதற்குள்ளெல்லாம் இருந்து புலப்படாது இருக்கும் 'அஹம்', உண்மையில்
    பிரும்மம் தான் என்ற உணர்வு ஏற்படுகிறது.
    அஹம் பிரும்மாஸ்மி என்ற ஞானம் பிறக்கிறது.

    ஆத்ம போதம் சொல்பவை எல்லாமே
    ஜீவனை சரியான வழி நடத்துபவை ஆகும்.
    ஆகவே
    தொடர்ந்து எழுதவேண்டும்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  4. //சூரியன் உதிக்குமுன்னேயும் சூரியன் இருக்கிறான்.
    திசைகளும் இருக்கின்றன.
    நாமும் இருக்கின்றோம்.
    சூரியன் உதித்தவுடன் நமக்கு தெளிவு ஏற்படுகிறது. //
    தங்கள் விளக்கத்திற்கும் நன்றி சுப்புரத்தினம் ஐயா.

    ReplyDelete